பரணதேவ நாயனார் அருளியது
பதினோராம் திருமுறை
1. சிவபெருமான் திருவந்தாதி
வெண்பா
657
ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதே
ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் - ஒன்றுரைத்துப்
பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்
பேரரவம் பூணும் பிரான்.
1
658
பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்
பிரானிடபம் பேரொலிநா ணாகம் - பிரானிடபம்
பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்து
பேணும் உமையிடவம் பெற்று.
2
659
பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே
பெற்றும் பிறவி பிறந்தொழிமின் - பெற்றும்
குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக்
குழையணிந்த கோளரவ நீ.
3
660
நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே
நீயேயா ளாவாயும் நீள்வாளின் - நீயே
ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா
ஏறூர் புனற்சடையா என்று.
4
661
என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம்
என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் - என்றும்
------ ------ ------ ------
புகலூரா புண்ணியனே என்.
5
662
என்னே இவளுற்ற மாலென்கொல் இன்கொன்றை
என்னே இவளொற்றி யூரென்னும் - என்னே
தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்
தவளப் பொடியானைச் சார்ந்து.
6
663
சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவாமூ வாப்பெருமை
சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் - சார்ந்துரைத்த
ஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும்
ஆதியேன் றென்பால் அருள்.
7
664
அருள்சேரா தாரூர்தீ ஆறாமல் எய்தாய்
அருள்சேரா தாரூர்தீ யாடி - அருள்சேரப்
பிச்சையேற் றுண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்
பிச்சையேற் றுண்டு ழல்வாய் பேச்சு.
8
665
பேச்சுப் பெருகுவதென் பெண்ஆண் அலிஎன்று
பேச்சுக் கடந்த பெருவெளியைப் - பேச்சுக்
குரையானை ஊனுக் குயிரானை ஒன்றற்
குரியானை நன்னெஞ்சே உற்று.
9
666
உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன்
உற்றுரையா வண்ணம்ஒன் றானானை - உற்றுரையா
ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுது
மானையுரித் தானை அடைந்து.
10
667
அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித்
தடைந்துன்பால் மேலுகுத்த மாணிக் - கடைந்துன்பால்
அவ்வமுதம் ஊட்டி அணிமலருஞ் சூழ்ந்தன்று
அவ்வமுதம் ஆக்கினாய் காண்.
11
668
காணாய் கபாலி கதிர்முடிமேற் கங்கைதனைக்
காணாயக் காருருவிற் சேருமையைக் - காணாய்
உடைதலைகொண் டூரூர் திரிவானை நச்சி
உடைதலைகொண் டூரூர் திரி.
12
669
திரியும் புரமெரித்த சேவகனார் செவ்வே
திரியும் புரமெரியச் செய்தார் - திரியும்
அரியான் திருக்கயிலை என்னாதார் மேனி
அரியான் திருக்கயிலை யாம்.
13
670
------ ------ ------ ------
ஆம்பரிசே செய்தங் கழியாக்கை -ஆம்பரிசே
ஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானை
ஏத்தித் திரிந்தானை ஏத்து.
14
671
ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்
ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் - ஏத்துற்றுப்
பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான்
பாசுபதம் இன்றளியென் பால்.
15
672
பாலார் புனல்வாய் சடையானுக் கன்பாகிப்
பாலார் புனல்வாய் சடையானாள் - பாலாடி
ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீ
ஆடுவான் என்றென்றே ஆங்கு.
16
673
ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றே
ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை - ஆங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்தும் ஆம்.
17
674
மாயனைஓர் பாகம் அமர்ந்தானை வானவரும்
மாயவரு மால்கடல்நஞ் சுண்டானை - மாய
வருவானை மாலை ஒளியானை வானின்
உருவானை ஏத்தி உணர்.
18
675
உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம்
உணரா வளைகழல ஒட்டி - உணரா
அளைந்தான மேனி அணிஆரூ ரேசென்
றளைந்தானை ஆமாறு கண்டு.
19
676
கண்திறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்
கண்டிறந்து காமன் பொடியாகக் - கண்டிறந்து
கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான்
கானினுகந் தாடுங் கருத்து.
20
677
கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன்
கருத்துடைய கங்காள வேடன் - கருத்துடைய
ஆனேற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர்
ஆனேற்றான் ஏற்றான் எரி.
21
678
எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி
எரியாடி ஏகம்ப மாகும் - எரியாடி
ஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்ப
ஈமத் திடுங்காடு தான்.
22
679
தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில்
தானயன் மாலாய தன்மையான் - தானக்
கரைப்டுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக்
கரைப்படுத்தான் தன்பாதஞ் சார்.
23
680
சாராவார் தாமுளரேல் சங்கரன்தன் மேனிமேல்
சாராவார் கங்கை உமைநங்கை - சார்வாய்
அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றி
அரவமது செஞ்சடையின் மேல்.
24
681
மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்
மேலாயம் இன்றிவே றுண்பொழுதில் - மேலாய
மங்கை உமைவந் தடுத்திலளே வானாளும்
மங்கை உமைவந் தடுத்து.
25
682
அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்டம் அஃதே - அடுத்ததிரு
ஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும்
ஆனைக்கா வான்தன் அமைவு.
26
683
அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றாங்
கமைவும் பரமான ஆதி - அமையும்
திருவால வாய்சென்று சேராது மாக்கள்
திருவால வாய்சென்று சேர்.
27
684
சென்றுசெருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச்
சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன்
கண்ணிடந்தன் றப்பும் கருத்தற்குக் காட்டினான்
கண்ணிடந்தன் றப்பாமை பார்த்து.
28
685
பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே
பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே - பார்த்திட்
டுடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட்
டுடையானஞ் சோதாதார் ஊண்.
29
686
ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின்
ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் - ஊணென்றும்
விட்டானே வேள்வி துரந்தானே வெள்ளநீர்
விட்டானே புன்சடைமேல் வேறு.
30
687
வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்
வேறுரைத்த மேனி விரிசடையான் - வேறுரைத்த
பாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும்
பாதத்தாய் என்னும் மலர்.
31
688
மலரணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத
மலரணைந்து மால்நயன மாகும் - மலரணைந்து
மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால்
வன்சக்க ரம்பரனே வாய்த்து.
32
689
வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்
வாய்த்த அடிமுடி யுங்காணார் - வாய்த்த
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம்.
33
690
தாமென்ன நாமென்ன வேறில்லை தத்துறவில்
தாமென்னை வேறாத் தனித்திருந்து - தாமென்
கழிப்பாலை சேருங் கறைமிடற்றார் என்னோ
கழிப்பாலை சேருங் கடன்.
34
691
கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயார் கடநாகம்
மாளஉரித் தாடுவார் நம்மேலை வல்வினைநோய்
மாளஇரித் தாடுமால் வந்து.
35
692
வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார்
வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் - வந்தார்
சுரிதருவார் ஐங்கொன்றைத் தாராரைக் கண்டு
சுரிதருவார் ஐங்கொன்றைத் தார்.
36
693
தாரான் எனினுஞ் சடைமுடையான் சங்கரனந்
தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் - தாராய
நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே
வாளுங் கொடுத்தான் மதித்து.
37
694
மதியாரும் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்
மதியாரும் மாலுடைய பாகன் - மதியாரும்
அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூடாகி
அண்ணா மலைசேர்வ ரால்.
38
695
ஆலநிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெய்வ தாடுவதீ - ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.
39
696
சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்
சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் - சொல்லாய
வீரட்டத் தானை விரவார் புரம்அட்ட
வீரட்டத் தானை விரை.
40
697
விரையாரும் மத்தம் விரகாகச் சூடி
விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு - விரையாரும்
நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்
நஞ்சுண்ட வாதி நலம்.
41
698
நலம்பாயும் ஆக்க நலங்கொண்டல் என்றல்
நலம்பாயும் மான்நன் குருவ - நலம்பாய்செய்
தார்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்
.. .. .. தார்த்தார்க்கும் அண்ணா மலை.
42
699
மலையார் கலையோட வாரோடக் கொங்கை
மலையார் கலைபோய்மால் ஆனாள் - மலையார்
கலையுடையான் வானின் மதியுடையான் காவாத்
தலையுடையான் என்றுதொழு தாள்.
43
700
தாளார் கமல மலரோடு தண்மலரும்
தாளார வேசொரிந்து தாமிருந்து - தாளார்
சிராமலையாய் சேமத் துணையேயென் றேத்தும்
சிராமலையார் சேமத் துளார்.
44
701
ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவா அஞ்சலுமை
ஆர்துணையா ஆனை உரிமூடி - ஆர்துணையாம்
பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்
பூவணத்தாய் என்னின் புகல்.
45
702
புகலூர் உடையாய் பொறியரவம் பூணி
புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே - புகலூராய்
வெண்காடா வேலை விடமுண்டாய் வெள்ளேற்றாய்
வெண்காடா என்பேனோ நான்.
46
703
நானுடைய மாடேஎன் ஞானச் சுடர்விளக்கே
நானுடைய குன்றமே நான்மறையாய் - நானுடைய
காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.
47
704
ஆயன் றமரர் அழியா வகைசெய்தாய்
ஆயன் றமரர் அழியாமை - ஆயன்
திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி
திருத்தினான் சேதுக் கரை.
48
705
கரையேனு மாதர் கருவான சேதுக்
கரையேனு மாது கரையாம் - கரையேனும்
கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையே
கோளிலியெம் மாதி குறி.
49
706
குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக்
குறியாகி நின்ற குணமே - குறியாகும்
ஆலங்கா டெய்தா அடைவேன்மேல் ஆடரவம்
ஆலங்கா டெய்தா அடை.
50
707
அடையும் படைமழுவும் சூலமிலம் பங்கி
அடையும் இறப்பறுப்ப தானால் - அடைய
மறைக்காடு சேரும் மணாளரென்பாற் சேரா
மறைக்காடு சேர்மக்கள் தாம்.
51
708
தாமேய ஆறு சமய முதற்பரமும்
தாமேய வாறு தழைக்கின்றார் - தாமேல்
தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட
தழலுருவர் சங்கரர்என் பார்.
52
709
பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்
பார்மேவு கின்ற படுதலையர் - பார்மேல்
வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்
வலஞ்சுழியைச் சேர்வாகு வார்.
53
710
வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா
வாரணிந்த கொன்றை மலர்சூடி - வாரணிந்த
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய்
செஞ்சடையாய் செல்ல நினை.
54
711
நினைமால் கொண்டோடி நெறியான தேடி
நினைமாலே நெஞ்சம் நினைய - நினைமால் கொண்
டூர்தேடி உம்பரால் அம்பரமா காளாவென்
றூர்தேடி என்றுரைப்பான் ஊர்.
55
712
ஊர்வதுவும் ஆனே றுடைதலையில் உண்பதுவும்
ஊர்வதுவு மெல்லுரக மூடுவர்கொல் - ஊர்வதுவும்
ஏகம்ப மென்றும் இடைமருதை நேசித்தார்க்
கேகம்ப மாய்நின்ற ஏறு.
56
713
ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்
ஏறேறி யூரும் எரியாடி - ஏறேய
ஆதிவிடங் காகாறை அண்டத்தாய் அம்மானே
ஆதிவிடங் காவுமைநன் மாட்டு.
57
714
மாட்டும் பொருளை உருவை வருகாலம்
வாட்டும் பொருளாய் மறையானை - வாட்டும்
உருவானைச் சோதி உமைபங்கா பங்காய்
உருவான சோதி உரை.
58
715
உரையா இருப்பதுவும் உன்னையே ஊனின்
உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் - உரையாய
அம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்ற
அம்பொனே சோதியே ஆய்ந்து.
59
716
ஆய்ந்துன்றன் பாதம் அடையவரும் என்மேல்
ஆய்ந்தென்றன் பாச மலமறுத் - தாய்ந்துன்றன்
பாலணையச் செய்த பரமா பரமேட்டி
பாலணையச் செய்த பரம்.
60
717
பரமாய பைங்கட் சிரமேயப் பூண்ட
பரமாய பைங்கட் சிரமே - பரமாய
ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய்
ஆறடைந்த செஞ்சடையாய் அன்பு.
61
718
அன்பே உடைய அரனே அணையாத
அன்பே உடைய அனலாடி - அன்பே
கழுமலத்து ளாடுங் கரியுரிபோர்த் தானே
கழுமலத்து ளாடுங் கரி.
62
719
கரியார்தாஞ் சேருங் கலைமறிகைக் கொண்டே
கரியார்தாஞ் சேருங் கவாலி - கரியாகி
நின்ற கழிப்பாலை சேரும் பிரான்நாமம்
நின்ற கழிப்பாலை சேர்.
63
720
சேரும் பிரான்நாமஞ் சிந்திக்க வல்லீரேல்
சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் - சேரும்
மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான்
மலையான் மகளை மகிழ்ந்து.
64
721
மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்யும் மகளிர்
மகிழ்ந்தம் பரமாகி நின்றார் - மகிழ்ந்தங்கம்
ஒன்றாகி நின்ற உமைபங்கன் ஒற்றியூர்
ஒன்றாகி நின்ற உமை.
65
722
உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும்
உமைகங்கை என்றிருவர் காணார் - உமைகங்கை
கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று
கார்மிடற்றம் மேனிக் கினி.
66
723
இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம்
இனியவா ஆகாமை யற்றும் - இனியவா
றாக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை
ஆக்கை பலசெய்த அன்று.
67
724
அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி
அன்றவுணர் வீட அருள்செய்தோன் - அன்றவுணர்
சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச்
சேராமல் நின்ற சிவம்.
68
725
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம் - சிவனந்தம்
சேரும் உருவுடையீர் செங்காஅட் டங்குடி மேல்
சேரும் உருவுடையீர் செல்.
69
726
செல்லு மளவும் சிதையாமற் சிந்திமின்
செல்லு மளவும் சிவனும்மைச் - செல்லும்
திருமீச்சூர்க் கேறவே செங்கணே றூரும்
திருமீச்சூர் ஈசன் திறம்.
70
727
திறமென்னுஞ் சிந்தை தெரிந்தும்மைக் காணும்
திறமென்னுஞ் சிந்தைக்கு மாமே - திறமென்னும்
சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்ற
சித்தத்தீ ரேசெல்லும் நீர்.
71
728
நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும்
நீரே நெடுவானில் நின்றீரும் - நீரே
நெருப்பாய தோற்றத்து நீளாரும் பூண்டு
நெருப்பாய தோற்றம் நிலைத்து.
72
729
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரே - நிலைத்தீரக்
கானப்பே ரீர்கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பே ரீர்கங்கை யீர்.
73
730
ஈரம் உடைய இளமதியஞ் சூடினீர்
ஈரம் உடைய சடையினீர் - ஈர
வருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம்
வருங்கால மாயினீர் வாழ்வு.
74
731
வாழ்வார் மலரணைவார் வந்த வருநாகம்
வாழ்வார் மலரணைவார் வண்கங்கை - வாழ்வாய
தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார்
தீயாட வானாளு மாறு.
75
732
மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல்
மாறாத நீருடைய மாகாளர் - மாறா
இடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னே
இடுங்கையர் சேர்வாக ஈ.
76
733
ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்
ஈயும் பொருளே இடுகாட்டில் - நீயும்
படநாகம் பூணும் பரலோகீர் என்னீர்
படநாகம் பூணும் படி.
77
734
படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டிப்
படியேறும் பார்த்துப் பரனெப் - படியேனைப்
பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய்
பாருடையாய் யானுன் பரம்.
78
735
பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்
பரமாய ஆதிப் பரனே - பரமாய
நீதியே நின்மலனே நேரார் புரமூன்றும்
நீதியே செய்தாய் நினை.
79
736
நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்
நினையடைந்தேன் சித்த நிமலா - நினையடைந்தேன்
கண்டத்தாய் காளத்தி யானே கனலாரும்
கண்டத்தாய் காவாலி கா.
80
737
காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேஎம்
காவாய்ப் பொலிந்த கடுவெளியே - காவாய
ஏறுடையாய் என்னை இடைமருதி லேயென்றும்
ஏறுடையாய் நீயே கரி.
81
738
கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ணன்
கரியாருங் கூற்றங் கனியே - கரியாரும்
காடுடையாய் காலங்க ளானாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.
82
739
ஆனாய னாய அடலேறே ஆருர்க்கோன்
ஆனாய னாஅமுத மேஆனாய் - ஆனாய்
கவரெலும்போ டேந்தி கதநாகம் பூணி
கவரெலும்பு தார்கை வளை.
83
740
வளைகொண்டாய் என்னை மடவார்கண் முன்னே
வளைகொண்டாய் மாசற்ற சோதி - வளைகொண்டாய்
மாற்றார் கதுவ மதிலாரூர் சேர்கின்ற
மாற்றாரூர் கின்ற மயல்.
84
741
மயலான தீரும் மருந்தாகும் மற்றும்
மயலானார் ஆருர் மயரார் - மயலான
கண்ணியர்தம் பாகா கனியே கடிக்கொன்றைக்
கண்ணியலான் பாதமே கல்.
85
742
கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்
கலைமான் கறைகாண் கவாலி - கலைமானே
ஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள்
ஆடுவதும் ஆடான் அரன்.
86
743
அரனே அணியாரூர் மூலட்டத் தானே
அரனே அடைந்தார்தம் பாவம் - அரனே
அயனார்தம் அங்கம் அடையாகக் கொண்டாய்
அயனாக மாக அடை.
87
744
அடையுந் திசைஈசன் திண்டோள் ஆகாசம்
அடையுந் திருமேனி அண்டம் - அடையும்
திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி
திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.
88
745
மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே
மூன்றரண மாய்நின்ற முக்கணனே - மூன்றரண
மாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்ற
வாய்நின்ற சோதி அறம்.
89
746
அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர் - அறமாய
வல்வினைகள் வாரா எனமருக லாரென்ன
வல்வினைகள் வாராத வாறு.
90
747
ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர்
ஆறுடையர் காலம் அமைவுடையர் - ஆறுடைய
சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற
சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு.
91
748
சேர்வும் உடையர் செழுங்கொன்றைத் தாரார்நஞ்
சேர்வும் உடையர் அரவுடையர் - சேரும்
திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும்
திருச்சாய்க்காட் டேநின் உருவு.
92
749
உருவு பலகொண் டொருவராய் நின்றார்
உருவு பலவாம் ஒருவர் - உருவு
பலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார்
பலவல்ல ஒன்றாப் பகர்.
93
750
பகரப் பரியானை மேலூரா தானைப்
பகரப் பரிசடைமேல் வைத்த - பகரப்
பரியானைச் சேருலகம் பல்லுயிர்கள் எல்லாம்
பரியானைச் சேருலகம் பண்.
94
751
பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும்
பண்ணாகச் செய்த பரஞ்சோதீ - பண்ணா
எருதேறி யூர்வாய் எழில்வஞ்சி எங்கள்
எருதேறி யூர்வாய் இடம்.
95
752
இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்
இடமானார்க் கீந்த இறைவர் - இடமாய
ஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார்
ஈங்கோய் மலையார் எமை.
96
753
எமையாள வந்தார் இடரான தீர
எமையாளும் எம்மை இமையோர் - எமையாளும்
வீதிவிடங் கர்விடம துண்டகண் டர்விடையூர்
வீதிவிடங் கர்விடையூர் தீ.
97
754
தீயான மேனியனே செம்பவளக் குன்றமே
தீயான சேராமற் செய்வானே - தீயான
செம்பொற் புரிசைத் திருவாரூ ராயென்னைச்
செம்பொற் சிவலோகஞ் சேர்.
98
755
சேர்கின்ற சிந்தை சிதையாமற் செய்வானே
சேர்கின்ற சிந்தை சிதையாமற் - சேர்கின்றோம்
ஒற்றியூ ரானே உறவாரும் இல்லையினி
ஒற்றியூ ரானே உறும்.
99
756
உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்
உறுமுந்த முன்னே உடையாமல் - உறுமுந்தம்
ஓரைந் துரைத்துற் றுணர்வோ டிருந்தொன்றை
ஓரைந் துரைக்கவல்லார்க் கொன்று.
100
ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல
ஒன்றைப் பகரில் ஒருகோடி - ஒன்றைத்
தவிரா துரைப்பார் தளரார் உலகில்
தவிரார் சிவலோகந் தான்.
 
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com